Monday, September 26, 2016

இறுதி யாத்திரை


என் காதலி ...!
நான் என்னவோ...
உனக்காக எழுதப்பட்ட
கடிதம் தான் - ஏனோ ..
உன் வாசல் கதவுகளை
தட்டுகின்ற போதெல்லாம்
உன்னால் ..........
திருப்பியனுப்பப்பட்டு...
மீண்டும் மீண்டும்
அச்சடிக்கப்பட்டு ...
கிழிந்து போன
காகிதம் நான்.
இருந்தும் ...
கிழிந்து போன நிலையிலும்
இந்தத் திருமுகம் - உந்தன்
மதிமுகம் காண
ஏங்குகின்ற போதெல்லாம்
ஏன் என் இனியவளே !
மறுதலிக்கிறாய் .
கண்மணி!
இனியும் என்னில்
படிப்பதற்கு ..
வார்த்தைகள் இல்லைதான்.
ஆனாலும் ...
மரணப் பாதையிலும்
உந்தன் கைகள் பட்டு
கசக்கி வீசப்படத்தான்
ஆசைப்படுகிறேனடி.
உன் மனதில்
எனக்கு....
இடம் இல்லையாயினும்
உன் கைகள் தீண்டிய
திருப்தியிலாவது
இவ் ஆத்மா
இறுதி யாத்திரை
போகட்டும்.

                                   ( முற்றும் )
கல்லாறு சைத்தன்யா.
                                                          ........................................

Saturday, September 24, 2016

எல்லோரும் இங்கே பைத்தியம் எங்குமே இல்லை இதற்கொரு வைத்தியம்.


சிலருக்குத் தாய் மீது பைத்தியம்
சிலருக்கோ தாரம் மீது பைத்தியம்
சிலருக்கு தன் சேய் மீது பைத்தியம்
சிலருக்கோ வளர்ப்பு நாய் மீது பைத்தியம்
சிலருக்குப் பொன் மீது பைத்தியம்
சிலருக்கோ பெண் மீது பைத்தியம்
சிலருக்கு மண் மீது பைத்தியம்
சிலருக்கோ தாய்மண் மீது பைத்தியம்
சிலருக்குச் சொத்துப் பைத்தியம்
சிலருக்கோ பணப் பைத்தியம்
சிலருக்கு நூலாடைப் பைத்தியம்
சிலருக்கோ அரை நிர்வாணப் பைத்தியம்
சிலருக்கு உணவுப் பைத்தியம்
சிலருக்கோ உறக்கப் பைத்தியம்
சிலருக்குக் காதல் பைத்தியம்
சிலருக்கோ காமப் பைத்தியம்
சிலருக்குக் கல்விப் பைத்தியம்
சிலருக்கோ கலவிப் பைத்தியம்
சிலருக்கு மதம் மீது பைத்தியம்
சிலருக்கோ சாதி மீது பைத்தியம்
சிலருக்குக் கணணிப் பைத்தியம்
சிலருக்கோ கைபேசிப் பைத்தியம்
பலருக்கோ....
கண்டதன் மீதெல்லாம் பைத்தியம்
எனக்கோ .......
செந்தமிழ்க் கவி மீது பைத்தியம்
மொத்தத்தில் எல்லோரும்
இங்கே பைத்தியம்
எங்குமே இல்லை
இதற்கொரு வைத்தியம்.
******************---******************
                      -முற்றும்-

கல்லாறு சைத்தன்யா
பெரியகல்லாறு.

Friday, September 23, 2016

தொடங்கிய இடத்திலேயே இன்னும் என் பயணம்.


அன்று..
கானல் நீரைக்
காதல் என்று
நம்பியிருந்தேன்.
இன்று ...
என் காதலையே
கானல் என்று
சொல்லிச் சென்றாள் ஒருத்தி.
தொடங்கிய இடத்திலேயே
இன்னும் என் பயணம்.

தெரியாது எனக்கு......


உன் ......
முகம் தெரியாது எனக்கு
முகவரியும் தெரியாது
உன்.....
வயது தெரியாது எனக்கு
வனப்பும் தெரியாது
இருந்தபோதும்....
நான் உன்னைக் காதலிக்கின்றேன்
அது கூட.....
ஏனென்று தெரியாது எனக்கு.

வந்ததோ...!


காலில் இருந்து
களற்றி எறிந்தாள்.
தாவிப் பிடித்தேன்
சலங்கை எனவே......
வந்ததோ சலங்கை அல்ல
என் காதலியின்
காற் செருப்பு.

Saturday, September 17, 2016

ஒருமுறையேனும் சிந்தனை செய்யடி



என் ....
தொலைபேசி
சினுங்கும் போதெல்லாம்,
இதயம் படபடவென்று
அடித்துக்கொள்கிறதடி.
இது..
உன்னிடம் இருந்து வரும்
அழைப்பாக இருக்கக்கூடாதா
என்னும் ஏக்கம் எனக்கு.
நீ...
எப்போது எடுப்பாய்
எனக்கான அழைப்பை.
அலைக்கழிகிறது இளமனது.
என் ஒவ்வொரு கணமும்
உந்தன்...செவ்விதழ்
திறந்து பேசும் - அந்த
ஒற்றை வரிக்காய்ச்
செவி வழி பார்த்து
ஒற்றைக் காலில்
தவமாய்த் தவமிருக்கிறது
என் மனது.
உன் .....
மந்திரப் புன்னகை காண
இமைக்க மறந்து
தவியாய்த் தவிக்கிறதென் விழிகள்.
காதலி....!
என்னை நிந்தனை செய்யாமல்
ஒருமுறையேனும்
சிந்தனை செய்யடி..
அப்போது உனக்குப் புரியும்
உன் சித்தம் முழுதும்
நான் மட்டும்தான்
நிறைந்திருப்பேன் என்பது.....

****----****----****----****----****----****----****
< கல்லாறு சைத்தன்யா>
     ~ பெரியகல்லாறு ~

Friday, September 9, 2016

பொய் சொல்லமாட்டேன்


நீ இல்லை என்றால்
நானும் இல்லை என்று
பொய் எல்லாம்
சொல்லத் தெரியவில்லை எனக்கு,
எனக்குள்ளேதான்
நீயும் இருக்கின்றாய்
என்பது தெரிந்த பின்பும் .